கருணாநிதி, ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார் கனிமொழி!
இன்று 50 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் கனிமொழி திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தார்.
சமீபத்தில் 2ஜி வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழி மிகுந்த உற்சாகத்துடன் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இன்று 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் கனிமொழிக்கு கட்சித் தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பலர் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கனிமொழியின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை இல்லத்தில் சந்தித்தார்.
தனது பிறந்த நாளான இன்று தந்தையையும், சகோதரரையும் சந்தித்து ஆசிபெற்றதாக கனிமொழி தெரிவித்தார். மேலும், பெண்களுக்கு அரசியல் மட்டுமின்றி பொது தளங்களில் கூட பல தடைகள் இருப்பதாக அவர் கூறினார். எனவே, மக்களவையில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள பாரதிய ஜனதா நினைத்தால் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றலாம் என்று தெரிவித்த அவர், பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் கூறினார்.