இது ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற தேர்தல்: கனிமொழி
’இந்த தேர்தல் ஜனநாயகத்தை, அரசியல் அமைப்புச் சட்டத்தை, மதசார்பற்றத் தன்மையை பாதுகாக்கின்ற தேர்தல்’’ என்று சென்னையில் வாக்களித்தப் பின் திமுக வேட்பாளர் கனிமொழி கூறினார்.
மக்களவைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த 11 ஆம் தேதி நடந்தது. இதில் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது. 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில், 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
சென்னையில் வாக்களித்த தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘’ திமுக -காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் மிகச் சிறப்பான வெற்றி பெறுவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. இந்த தேர்தல் இன்று இருக்கும் ஜனநாயகத்தை, அரசியல் அமைப்புச் சட்டத்தை, மதசார்பற்றத் தன்மையை பாதுகாக்கின்ற தேர்தல்.
பல இடங்களில் வாக்குப் பதிவு எந்திரங்கள் சரியில்லை என்றும் அதை சரி செய்துகொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். அது உண்மையிலே யே சரியில்லாமல் இருக்கிறதா, வேறு பிரச்னையா என்பது போகப் போகத்தான் தெரியும். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பற்றி கேட்கி றீர்கள். அது ஆட்சியாளர்கள் கூட்டணி கட்சி போலதான் செயல்படுகிறது. மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் விதமாக சோதனைகள் நடத்தப்படுவது மிகத் தெளிவாகத் தெரிகிறது. தூத்துக்குடியில் சுமூகமாக வாக்குப் பதிவு நடந்துவருகிறது. நான் அங்கு செல்கிறேன்’’ என்றார்.