மத்திய அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் கன்னையா குமார்

மத்திய அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் கன்னையா குமார்
மத்திய அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் கன்னையா குமார்

ஜேஎன்யு மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை எதிர்த்து போட்டியிடுகின்றார்.

பீகார் மாநிலத்தில் நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரீய ஜனதா தளம் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ராஷ்டிரீய ஜனதா தளம் 20 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் போட்டியிடவுள்ளது. அத்துடன் ராஷ்டிரீய லோக் சம்தா கட்சிக்கு 5 இடங்களும், ஹிந்துஸ்தான் அவாம் மோர்சா கட்சிக்கு 3 இடங்களும் மற்றும் வீகாஷில் இன்சான் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி வெறும் 9 இடங்களில் மட்டும் போட்டியிடுவது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே, காங்கிரஸ் ஆர்ஜேடி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைவது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. அதனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பீகாரில் தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது தொடர்பாக அக்கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது. 

இந்நிலையில், பீகாரின் பெகுசராய் தொகுதியில் ஜேஎன்யு மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. பாட்னாவில் இன்று நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெகுசராய் தொகுதியில் பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெகுசராய் தொகுதி சிபிஐ கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது. 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மோடி அலை வலுவாக வீசிய நேரத்திலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 17 சதவீதம் வாக்குகளை பெற்றது. மேலும், மொதிஹராய், பங்கா, மதுபானி, கயா உள்ளிட்ட மேலும் சில தொகுதிகளில் போட்டியிட அக்கட்சி ஆலோசனை செய்து வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com