பாட்டாசு தொழிலாளர்கள் போராட்டத்தில் கமல் நற்பணி இயக்கம்
பட்டாசு தொழிலை பாதுகாக்கக் கோரி கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் வரும் 21ஆம் தேதி சிவகாசியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
மத்திய அரசு பட்டாசுக்கு சுற்றுப்புறச் சூழல் விதிகளிலிருந்து விலக்களித்து, சுற்றுச்சூழல் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்து பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர் தொடர்ந்து 25வது நாளாக காலம்வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுமார் 950 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை 360கோடி ரூபாய் பட்டாசு வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. அத்துடன் இத்தொழிலை நம்பி அச்சகம், காகித அட்டை தயாரிப்பு, காகித குழாய் தயாரிப்பு, கட்டிங், ஸ்கோரிங், பன்ச்சிங் உள்ளிட்ட 106 சார்பு தொழில்களும் பாதிப்படைந்துள்ளது.
பட்டாசு தொழிலை பாதுகாக்கக் கோரி கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் வரும் 21ஆம் தேதி சிவகாசியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் சார்பில் நடைபெற்ற கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.