பிக்பாஸ் மேடையை அரசியல் களமாக மாற்றிய கமல்! - இதுவரை நடந்தது என்ன?
பேனர் விவகாரம் தொடங்கி கீழடி அகழாய்வு வரை சமகால அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் பேசும் களமாக பிக்பாஸ் மேடையை மாற்றியிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன், தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என பிக்பாஸ் நிகழ்ச்சியின் விளம்பரம் வந்தபோது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதனால், அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க அதனை தனது கருத்துகளைப் பரப்பும் களமாகவே மாற்றிக் கொண்டார் கமல்ஹாசன்.
அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்தே கிடைக்கும் வாய்ப்புகளில் தனது சமூகக் கருத்துகளையும் பேசிவந்த அவர், அண்மைக் காலமாக சமகால அரசியல் நிகழ்வுகளுக்குக் கருத்துக் கூறும் தளமாகவும் பிக்பாஸ் மேடையை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். அந்த வகையில், மூன்றாவது சீசன் தொடங்கிய முதல் நிகழ்ச்சியிலேயே பெரியார், தமிழகத்தில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் என பலவற்றையும் குறிப்பிட்டு பேசினார். மேலும், போட்டியாளராக அறிமுகமான லாஸ்லியாவிடம் தமிழீழ பேச்சு வழக்கில் அநீதி கண்டு பொங்க வேண்டும், அநீதியை எதிர்க்கும் மையமாக விளங்க வேண்டும் என ஆக்ரோஷமாகப் பேசினார்.
அதை தொடர்ந்து, பேனர் விபத்தில் சுபஸ்ரீ மரணமடைந்த போது, அதற்கான கண்டனத்தை பதிவு செய்ததோடு, 30 ஆண்டுகளுக்கு முன்பே தன் ரசிகர்களிடத்தில் பேனர், பாலாபிஷேகம் போன்றவற்றைத் தவிர்க்க வலியுறுத்தியதையும் குறிப்பிட்டார். அதன்பிறகு, இந்தவார நிகழ்ச்சியில் தமிழுக்கு ஆபத்து நேரும் என்கிற நிலையில், கீழடி நம் சிறப்பை மீண்டும் அழுத்தமாக பறைசாற்றியிருக்கிறது என்றார் கமல்ஹாசன். அதோடு, தமிழர் நிலம் ராஜஸ்தான் வரை பரவியிருந்ததாகவும் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
பிக்பாஸ் மேடையில் கமல்ஹாசன் தெரிவிக்கும் அரசியல் கருத்துகளுக்கு பார்வையாளர்களிடத்தில் வரவேற்பும், சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் வரத் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில், மழை பொழியத் தொடங்கியிருந்தாலும், நீர் மேலாண்மை குறித்த எந்தவிதமான திட்டங்களும் நம்மிடம் இல்லை எனப் பதிவு செய்தார். உலகம் முழுக்க பல லட்சக்கணக்கானவர்கள் கண்டுகளிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றை பதிவு செய்வது கமல்ஹாசனின் சாதுர்யத்தை காட்டுவதாகவே இருக்கிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.