ஸ்டெர்லைட் அனுமதி மறுப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு
ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது சரியான திசையை நோக்கிய முதல் அடி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 60 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களுக்கு, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே காலாவதியான ஸ்டெர்லைட் ஆலையின் மாசுக்கட்டுப்பாட்டு உரிமத்தை, புதுப்பிக்க ஆலையின் சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. இதனை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளதால், பராமரிப்பு பணிகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நீட்டித்துள்ளது.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள். சரியான திசை நோக்கிய முதல் அடிதான் ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி மறுப்பு. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்களுக்குத் துணையாய் மக்களும் கண்காணிக்கத் துவங்கி விட்டார்கள்” என்று கூறியுள்ளார்.