ராஜபக்சே இலங்கை பிரதமரானதை வரவேற்கவில்லை- கமல்ஹாசன்
இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள ராஜபக்சே தமிழ் மக்களிடம் முன்பு போல் நடந்து கொள்ள மாட்டார் என நம்புவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு அவர் தெரிவித்தார். இருப்பினும், ராஜபக்சே இலங்கை பிரதமரானதை வரவேற்கவில்லை என்றும் இலங்கையில் முன்பு செய்த தவறை ராஜபக்சே செய்யமாட்டார் என நம்புவோம் என்றும் கூறினார். 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் போது மக்கள் நீதி மய்யம் தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் கமல்ஹாசன் கூறினார்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணியில் ரணில் விக்கிரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம்பெற்றிருந்தது. 2015 பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பெற்றது. இந்தக் கூட்டணியில் சமீப காலமாக பிளவு ஏற்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவிற்கு எதிரான சிறிசேன ஆதரவாளர்கள் சிலர் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வந்தனர்.
இந்நிலையில், ரணில் விக்கிரம சிங்கே பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றார். ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணி வாபஸ் பெற்றதை அடுத்து உடனடியாக இந்த அதிரடி அரசியல் மாற்றம் நடைபெற்றது. இந்நிலையில் ராஜபக்சே இலங்கை பிரதமரானதை வரவேற்கவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.