பிறந்தநாளில் அரசியலில் குதிக்கிறார் கமல்ஹாசன்?

பிறந்தநாளில் அரசியலில் குதிக்கிறார் கமல்ஹாசன்?

பிறந்தநாளில் அரசியலில் குதிக்கிறார் கமல்ஹாசன்?
Published on

அரசியல் களத்தில் அதிரடி கருத்துகளை கூறிவரும் நடிகர் கமல்ஹாசன், அவரது பிறந்த நாளான வரும் நவம்பர் 7ஆம் தேதி அரசியல் பிரவேசம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கேற்ப, தனது ரசிகர்களும், மாவட்ட நற்பணி செயலாளர்களையும் அவர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் நடிகர் கமல்ஹாசன், தனது நற்பணி இயக்க மாவட்ட பொறுப்பாளர்கள், செயலாளர்களை நேற்று சந்தித்தார். நற்பணி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது முதலே இந்த கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை நடந்துவருவதாக ரசிகர்கள் கூறினாலும், இந்த முறை நடந்த கூட்டம் அவரது அரசியல் கருத்துகளால் அதிக கவனம் பெற்றுள்ளது. ஆனால், இந்த கூட்டத்தில் டெங்குவை ஒழிப்பதில் நற்பணி இயக்கத்தினர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய கமல் அரசியல் பேசவில்லை என நற்பணி இயக்கத்தினர் கூறுகின்றனர்.

இதேபோல் நற்பணி இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவது பற்றி எந்த அறிவிப்பும் கமல் அளிக்கவில்லை என்று கூறும் மாவட்ட பொறுப்பாளர்கள், அரசியல் பயணம் பற்றி அவரே அறிவிப்பு வெளியிடுவர் என்றும், அடுத்தமாதம் அவரது பிறந்தநாளில் இதற்கான அறிவிப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட பொறுப்பாளர்கள், செயலாளர்களின் கருத்துகள் கமலின் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்வதோடு, அதற்கான நேரத்திற்காக அவர் ஆயத்தமாகி வருவதையே சுட்டிக்காட்டுகின்றன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com