தனி மனித வாழ்க்கையில் ஒழுக்கமில்லாதவர் கமல்ஹாசன்: ராஜேந்திர பாலாஜி சாடல்

தனி மனித வாழ்க்கையில் ஒழுக்கமில்லாதவர் கமல்ஹாசன்: ராஜேந்திர பாலாஜி சாடல்
தனி மனித வாழ்க்கையில் ஒழுக்கமில்லாதவர் கமல்ஹாசன்: ராஜேந்திர பாலாஜி சாடல்

கமல்ஹாசன் தனி மனித வாழ்க்கையில் ஒழுக்கமாக நடந்து கொள்ளவில்லை. அப்படிப்பட்டவருக்கு நல்ல ஆட்சியை குறை சொல்வற்கான அருகதை கிடையாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்தும் முதல்வரை எந்த கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன் என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாட்டை மேம்படுத்தும் கருவியாக உதவ வேண்டும். அந்த கருவிகள் சரியாக செயல்படவில்லை என்றால், மாற்று கருவியை தேடவேண்டும் என்றும் தெரிவித்திருந்ததார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "கமல்ஹாசன் தனி மனித வாழ்க்கையில் ஒழுக்கமாக நடந்து கொள்ளவில்லை. அப்படிப்பட்டவருக்கு நல்ல ஆட்சியை குறை சொல்வதற்கு எந்த அருகதையும் கிடையாது. தேவையில்லாமல் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள சிங்கத்துடன் மோதுகிறார். அதிமுக-வினர் அவரின் நடவடிக்கையை கவனித்துக் கொண்டு தான் வருகின்றனர். ஜெயலலிதா இறப்பின் போதும் கூட சரியான இரங்கல் அறிக்கையை தெரிவிக்காமல் கிண்டலான அறிக்கையை வெளியிட்டிருந்தார். இப்போது, அதிமுக ஆட்சியை கேலி செய்யும் அளவில் பேசுகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்." என்றார். 

மேலும் "எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் என்ன குறையை அவர் கண்டார்? எந்த குறையும் இல்லாமல் ஆட்சி நல்லமுறையில் சென்றுக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசனுக்கு எங்கள் மீது காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. விஸ்வரூபம் பட விவகாரத்தில் இருந்து அதிமுக மீது அவர் அதிருப்தியாக இருக்கிறார். முரசொலி பவள விழாவில் கூட அவர் கலந்துகொண்டார். எனவே அவரின் கருத்தை திமுக-வின் கருத்தாக ஏற்றுக் கொள்ள முடியுமே தவிர தனிமனிதர் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த இடத்தில் ஊழல் என்று அவரால் ஆணித்தரமாக கூற முடியுமா..? அப்படி சொன்னால் அவருக்கு எங்களால் பதிலளிக்க முடியும். திமுக-வில் இணைய விருப்பம் என்றால் திமுக-வில் இணைய வேண்டியது தானே. அதனைவிட்டுவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதிமுக-வை குறை சொல்கிறார் என்றால் இது அவரின் தகுதிக்கு சரியல்ல. ஒரு இயக்கத்தை ஆரம்பித்துவிட்டு குற்றச்சாடு சொன்னால் கூட அதனை ஏற்றுக்கொள்ளலாம். பாலாறு பிரச்னை, இலங்கை பிரச்னை உள்ளிட்ட எந்தவித பிரச்னைகளுக்கும் வராமல் எந்தவித உதவியும் செய்யாமல் இன்று வந்து குரல் கொடுக்கிறார் என்றால் அது தேவையற்ற குரல். உரிமைக்கான குரல் அல்ல" என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com