பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கொள்கை ரீதியில் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கமல் கூறியுள்ளார்.
கமல்ஹாசன் கட்சி ஆரம்பிப்பது உறுதியாகி உள்ளது. ஆனால் அதை அவர் எப்போது அறிவிப்பார் என்பதில்தான் குழப்பம் நீடிக்கிறது. அவர் தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து கலந்தாலோசித்து வருகிறார். வெறுமனே ட்விட்டர் அரசியலில் இருந்து சமீபகாலமாக களத்திற்கும் கமல் வரத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் டெல்லிக்கு சென்றுள்ள கமலஹாசன் அங்குள்ள பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அரசியல் பிரவேசம் குறித்து பல கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அதற்கு அவர், “என்னுடைய அரசியல் கட்சியின் பெயரையும் கொள்கையையும் விரைவில் வெளியிடுவேன். பாஜக மற்றும் காங்கிரசுடன் கொள்கை ரீதியான கூட்டணி வைக்கமாட்டேன். தமிழகத்தின் நலன் கருதி கூட்டணி வைக்கலாம். அரசியலுக்கு வரும் தைரியம் எனக்கு இருக்கிறது, தோல்வி பயம் இல்லை. தமிழக அரசியலில் என்னை முன்னிறுத்தாமல் மாற்றத்தை முன்னிறுத்துகிறேன், மாற்றத்தை விரும்புகிறவர்கள் என்னை ஆதரிப்பார்கள்” என்று அவர் கூறினார்.