கட்சி முத்திரை சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்த கமல்

கட்சி முத்திரை சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்த கமல்

கட்சி முத்திரை சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்த கமல்
Published on

’மக்கள் நீதி மய்யம்’ கொடியில் உள்ள லோகோ தொடர்பான சர்ச்சைக்கு கமல்ஹாசன் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 21ம் தேதி மதுரையில் நடந்த அரசியல் மாநாட்டில் கட்சியின் பெயரை அறிவித்த கமல்ஹாசன், கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். கமலின் கட்சிக் கொடியில், 6 இணைந்த கைகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. 3 கைகள் வெள்ளை நிறத்திலும், 3 கைகள் சிவப்பு நிறத்திலும் உள்ளன. அதற்குள் வெள்ளை நட்சத்திரத்தை சுற்றி கறுப்பு நிற வளையம் இருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து கமலின் கட்சிக் கொடி காப்பி அடிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. தேசிய தபால் ஊழியர்கள் கூட்டமைப்பின் முத்திரையை போல் உள்ளது என்று சிலரும், ஏக் பாரத் ஸ்ரேஷ்ட் பாரத்தின் முத்திரையை போல் உள்ளதாக ஹெச்.ராஜாவும் கூறியிருந்தனர். இந்த இரண்டையும்விட மும்பை செம்பூரில் உள்ள தமிழர் பாசறை அமைப்பின் முத்திரை அச்சு அசல் கமல் கட்சி கொடியின் லோகோவை போல் உள்ளதாக பலர் கூறினர்.

இதுதொடர்பாக சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், இன்று அதற்கு கமல்ஹாசன் முற்றுப் புள்ளி வைத்துள்ளார். ஸ்ரீதேவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்வதற்கு முன்பு, சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மும்பை தமிழர் பாசறை அமைப்பை சேர்ந்தவர்கள் முத்திரையை பயன்படுத்த மனமுவந்து ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். 

இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது மும்பை தமிழர் பாசறை அமைப்பைச் சேர்ந்த ராஜேந்திர சுவாமி பேசுகையில், “கமல்ஹாசன் கட்சிக் கொடியில் பயன்படுத்தப்படும் சின்னமும், எங்களுடைய அமைப்பின் சின்னமும் ஒரே அளவிற்கு ஒத்துப்போகிறது. இதனால், கமல்ஹாசன் கட்டவுள்ள ஜனநாயக கோயிலில் எங்களுடைய பங்களிப்பு இருக்கும் வகையில் நாங்களாக மனமுவந்து முத்திரையை அவர் பயன்படுத்திக் கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டோம். தமிழக அரசியல் கமல்ஹாசன் சிறப்பான இடம்பிடிக்க வேண்டும் என்று நேரில் வாழ்த்து தெரிவிக்க வந்தோம்” என்றார்.

கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை திருச்சியில் நடைபெறவுள்ள மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக மாற்றி அறிவிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று கமல்ஹாசன் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com