டிரெண்டிங்
ஒவ்வொரு தமிழர் மீதும் ரூ45,000 கடன் சுமை: பட்ஜெட் குறித்து கமல் கருத்து
ஒவ்வொரு தமிழர் மீதும் ரூ45,000 கடன் சுமை: பட்ஜெட் குறித்து கமல் கருத்து
கடந்த 8 ஆண்டுகளில் ஒவ்வொரு தமிழரது தலையிலும் ரூ.45 ஆயிரம் கடனை சுமத்தப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2018-19 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு நேற்று தாக்கல் செய்தது. துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை தாக்கல் செய்தார். அதிமுக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
இந்நிலையில், ‘மக்கள் நீதி மய்யம் கட்சி’யின் தலைவர் கமல்ஹாசன், நிதிநிலை அறிக்கையை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்த நிதிநிலை அறிக்கை, பெரும்பாலும் சென்ற ஆண்டுகளின் நகலே என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளார்.
கமல்ஹாசன் அறிக்கையின் அம்சங்கள்:-
- இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்த திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை
- அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு அறிவித்த தொகை சென்ற ஆண்டை போல் கானல் நீராய் ஆகிவிடுமோ?
- கடந்த ஆண்டு குடிமராமத்து பணிக்கு ஒதுக்கிய தொகை செலவிடப்பட்டது என்ற விளக்கம் கிடைக்குமா?
- 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்ட பின்னும் தமிழகம் கல்வியில் பின் தங்கி இருப்பது தான் தரமான கல்வியா?
- ஜனாக்ரஹா நிறுவனம் நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பின்படி சென்னை மாநகரம் இந்தியாவில் 23 நகரங்களில் கடைசி 5 இடங்களில் இருக்கிறது.
- இந்து சமய அறநிலையத்துறை பற்றி எந்த அறிவிப்பும் இல்லையே ஏன்?
- பட்ஜெட்டில் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்களுக்கு சிறப்பான திட்டம் ஏதும் இல்லை