கள்ளக்குறிச்சி: காங்கிரஸ் வேட்பாளரை ரதத்தில் அழைத்துச் சென்று வாக்கு சேகரித்த திமுகவினர்
கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்னம் தங்க ரத யாத்திரையில் நின்றவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி தனி சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மணிரத்தினம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினராக உள்ள மணிரத்தினம் இன்று தனது தொகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு குதிரைசந்தல், சடயம்பட்டு, மட்டியை குறிச்சி, நல்லாத்தூர் ஆகிய கிராமங்களில் திமுக கூட்டணி கட்சியினர் ஆதரவோடு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது நல்லாத்தூர் என்ற கிராமத்தில் திமுக கூட்டணி கட்சியினர் காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்னத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இந்த பிரம்மாண்ட வரவேற்பில் வேட்பாளர் மணிரத்னத்தை பிரமாண்ட ரதத்தில் ஏற்றிக் கொண்டு ஊருக்குள் வாக்கு கேட்க அழைத்து சென்றனர். கூட்டணி கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த இந்த பிரம்மாண்ட ரத யாத்திரை வரவேற்பைக் கண்டு வேட்பாளர் மணிரத்னம் பிரமித்துப் போனார்.
தொடர்ந்து நல்லாத்தூர் கிராமத்தினர் மேளதாளங்கள் வானவேடிக்கைகள் கொண்டு ஆரவாரத்துடன் 500க்கும் மேற்பட்டவர்கள் வேட்பாளர் மணிரத்தினத்தை வீதி வீதியாக வீடு வீடாக அழைத்துச் சென்று வாக்கு கேட்க வைத்தனர். வாக்கு சேகரிப்பின்போது பெண்கள், வேட்பாளருக்கு ஆதரவளித்து ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பிரம்மாண்ட ரதயாத்திரை மூலம் காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினத்திற்கு திமுக கூட்டணி கட்சியினர் வரவேற்பு அளித்த விதம் காண்போருக்கு பரவசத்தை ஏற்படுத்தியது.