தமிழகத்தின் முழுநேர ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா. இவர் சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை மாற்றத்திற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் கல்ராஜ் மிஸ்ராவை தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பா.ஜ.கவின் மூத்த தலைவரான கல்ராஜ் மிஸ்ரா, உத்தரப்பிரதேசத்தின் காஸிப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர். 76 வயது நிரம்பிய இவர் உத்தரப்பிரதேசத்தின் தியோரியா மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். முன்னதாக இவர் உத்தரப்பிரதேசத்தின் பா.ஜ.க மாநில தலைவராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
தமிழகத்தில் ரோசய்யாவிற்குப் பிறகு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள வித்யாசாகர் ராவ் மஹாராஷ்டிராவின் ஆளுநர் ஆவார். இந்நிலையில் தமிழகத்திற்கு முழுநேர ஆளுநரை நியமிக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ராவை தேர்வு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய பிறகு இந்த தகவல் உறுதி செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.