"மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவித்தால் வரவேற்போம்"-கே.எஸ்.அழகிரி
எங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு நடிகர் ரஜினியும் கமல்ஹாசனும் எங்கள் அணியில் இணைந்தால் வரவேற்போம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில், “திமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின் தான். அவரை முன்னிறுத்திதான் தேர்தலை சந்திக்க உள்ளோம். எங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு நடிகர் ரஜினியும் கமல்ஹாசனும் எங்கள் அணியில் இணைந்தால் வரவேற்போம்.
தங்களுடைய இருப்பை தெரியப்படுத்தவே தேர்தலில் வெற்றி பெற்றால் இன்னோவா கார் தருவோம், மோர் தருவோம் என பாரதிய ஜனதாவினர் தெரிவித்து வருகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை ஸ்டாலினும் ராகுல் காந்தியும் சேர்ந்து அறிவிப்பார்கள். மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவித்தால் வரவேற்போம். அது தென் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கு உதவும்” எனத் தெரிவித்தார்.