“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி
இந்தத் தேர்தலில் மோடி இல்லாத ஒரு அரசாங்கம்தான் மத்தியில் ஆட்சி அமைக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்களுடைய நாடியை பிடித்து பார்க்க சொல்லுகிறேன். இந்தத் தேர்தலில் மோடி இல்லாத ஒரு அரசாங்கம்தான் மத்தியில் ஆட்சி அமைக்கும். மோடியால் ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை.
அதேபோல தமிழகத்தில் நடைபெற்ற 38 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஏறக்குறைய 37 நாடாளுமன்றத் தொகுதியில் எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும். உதாரணமாக நேற்றைய கருத்துக் கணிப்பு பாஜக 242 இடங்களில் வெற்றி பெறும் என்று நியூஸ் எக்ஸ் சொல்லுகிறது. அதுவே நியூஸ்18 பாஜகவுக்கு 336 இடங்களை சொல்லுகிறது.
இந்த இரண்டு தொலைக்காட்சிகளுக்கும் இடையே 100 தொகுதிகள் வித்தியாசம் இருக்கிறது. கருத்துக் கணிப்பு என்பது ஏறக்குறைய 5 தொகுதிகள்தான் வித்தியாசம் இருக்கும். ஆனால் இரண்டு நிறுவனத்திற்கும் இடையே 100 தொகுதிகள் வித்தியாசம் இருக்கிறது என்றால் அது எப்படி கருத்துக் கணிப்பாக இருக்க முடியும்.
இதை இரண்டு காரணங்களுக்காக இவர்கள் செய்கிறார்கள். ஒன்று, எதிர்கட்சிகள் 23 ஆம் தேதி கூடி பேச இருக்கிறார்கள். அதை மனதில் வைத்து இவர்கள் இதுபோன்ற கருத்துக் கணிப்பை வெளியிடுகிறார்கள். இரண்டு, தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு தனது ஏஜெண்டாக பாவித்து நாங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ள இடங்களில் சில தவறுகள் செய்யலாம் என்பதற்காக முன்கூட்டியே அவர்கள் திட்டத்தை வகுத்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.