ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைதான் கோரினோம்: கே.பி.முனுசாமி
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனில் முழுமையான நீதி கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்றும் தாங்கள் கேட்டது சிபிஐ விசாரணைதான் எனவும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, " ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதனை உள்ளபடியே வரவேற்கிறோம். ஜெயலலிதா மர்மமரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார். ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து அப்பழுக்கில்லாத உண்மை நிலையை நாட்டி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்க வேண்டும் என்றால் சிபிஐதான் இதனை விசாரிக்க வேண்டும். சிபிஐ விசாரணையைத்தான் நாங்கள் ஏற்கனவே கோரியிருந்தோம். விசாரணை கமிஷனில் முழுமையான நீதி கிடைக்குமா என்பது சந்தேகம்தான்" என்று கூறியுள்ளார்.
அதிமுக அணிகள் இணைப்பை பொறுத்தவரை சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து முழுமையாக விலக்கி வைக்க வேண்டும். அதேபோல் தேர்தல் ஆணையத்தில் அவர்கள் கொடுத்துள்ள பிரமாணப் பத்திரத்தை வாபஸ் பெற்றாலே போதும் என்றும் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.