ஸ்டாலின் வேண்டுகோள் சரியானதா?: பத்திரிகையாளர், தலைவர்கள் கருத்து

ஸ்டாலின் வேண்டுகோள் சரியானதா?: பத்திரிகையாளர், தலைவர்கள் கருத்து
ஸ்டாலின் வேண்டுகோள் சரியானதா?: பத்திரிகையாளர், தலைவர்கள் கருத்து

திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை அனைத்து கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு அனுப்ப வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுகுறித்து பத்திரிகையாளர் மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் வரும் 28 ஆம் தேதி  நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வேட்பு மனுத்தாக்கல் 3 ஆம் தேதி தொடங்கி வரும் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்று வருகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த நேர்காணலில், பூண்டி கலைவாணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமமுக சார்பில் திருவாரூர் வேட்பாளராக எஸ்.காமராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் யார் வேட்பாளர் என இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திருவாரூரில் தற்போது இடைத்தேர்தல் நடத்த தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தேர்தல் குறித்து இன்றே அறிக்கை அனுப்ப வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இதையடுத்து திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை அனைத்து கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு அனுப்ப வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுகுறித்து பத்திரிகையாளர் மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் கூறுகையில்,  “அனைத்து கட்சிகள், விவசாய சங்கங்களை கேட்டுதான் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் இப்போதைக்கு முடிகின்ற விவகாரம் இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அவர்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும். 

ஏனென்றால் கஜா புயலினால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அவர்களிடம் கருத்து கேட்டு தமிழக தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் அதிகாரிக்கு தெரிவித்து அதன்பின்தான் தேர்தல் தேதியை அறிவித்திருப்பார்கள். காரணம் இது ஹரியான இடைத்தேர்தலுடன் சேர்த்து அறிவிக்கப்படுகின்ற தேர்தல். இப்போது ஸ்டாலின் சொல்வதை பின்பற்றினால் காலதாமதமாகும். 

மற்ற தொகுதிகளில் நீதிமன்ற வழக்குகள் இருப்பதால் திருவாரூருக்கு மட்டும்தான் தேர்தல் நடத்த முடியும். அதற்கும் நடத்த வேண்டாம் என அதிமுகவும் திமுகவும் நினைக்கின்றனர். தேர்தலை சந்திக்க அச்சம் கொள்கின்றனர். மத்திய அரசு நினைத்தால் தேர்தல் நடத்தும். மத்திய அரசு நினைத்தால் தேர்தலை ரத்து செய்யும். இதற்கு மாநிலத்தில் இருக்கின்ற கட்சிகளும் உடந்தை. இதற்காக சுயேட்சைகள் நஷ்டப்படுவதா? இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். தேர்தல் நடைமுறைகளை அவரவர் இஷ்டத்திற்கு மாற்றுகிறார்கள். இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் துணை போகிறது. இது நீதிமன்ற அவமதிப்புச் செயல்” என தெரிவித்தார்.

இதுகுறித்து அமமுகவை சேர்ந்த புகழேந்தி கூறுகையில், “ஆளுங்கட்சியில் இருந்து வேட்பாளரை அறிவிக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் ஏஜென்சியாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மீறப்படுகின்றன. ஸ்டாலின் கூறியிருப்பது நல்ல கருத்து. ஆனாலும் தேர்தலை நிறுத்தக்கூடாது என்பது அமமுகவின் கருத்து” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கூறுகையில், “ திமுகவிற்கு ஒரு பயம் தொற்றி கொண்டுவிட்டது. இந்தத் தேர்தல் ஒரு அரசியல் பகடைக்காயாய் அமைந்து தனது எதிர்காலம் சூனியமாகி போய்விடுமோ என்றஅச்சத்திலும் பதட்டத்திலும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com