ஆளுநர் மாளிகையில் காங். மஜத எம்.எல்.ஏக்களுக்கு அனுமதி மறுப்பு
கர்நாடக ஆளுநர் மாளிகையில் அணி வகுத்துச் செல்ல காங்கிரஸ், மதசார்பற்ற எம்.எல்.ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடித்து வருகின்றது. எடியூரப்பாவும், காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமியும் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளனர். ஆனால், ஆளுநர் இதுவரை யாரையும் அழைக்கவில்லை.
இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிக்கைக்கு மாலை 5.30 மணியளவில் வந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஆளுநர் மாளிகைக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. குமாரசாமி, வீரப்ப மொய்லி உள்ளிட்ட இரு கட்சிகளை சேர்ந்த சில தலைவர்கள் மட்டும் ஆளுநரை சந்தித்தனர்.
ஆளுநரை சந்தித்த பின்னர் காங்கிரஸ், மஜத தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்புபடி ஆட்சி அமைக்க வாய்ப்பு தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் கூறினார். மேலும், சுயேட்சை எம்எல்ஏ காங்கிரஸ்-மஜத கூட்டணியை ஆதரிப்பதாக கூறினார்.
குமாரசாமி பேசுகையில், “ஆளுநரிடம் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்துள்ளோம். பெரும்பான்மையை பார்க்கும்படி ஆளுநரிடம் வலியுறுத்தினோம். நிலையான அரசை அமைக்க எண்ணிக்கை எங்களிடம் உள்ளது. மதசார்பற்ற எம்.எல்.ஏக்கள் ஒன்றாக உள்ளனர். யாரும் விலகவில்லை” என்றார்.
இதனிடையே, எத்தகைய முடிவை எடுப்பது என்பது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.