கர்நாடக இடைத்தேர்தல் - காங்., மஜத வேட்பாளர்கள் அறிவிப்பு
கர்நாடகாவில் நடைபெறவுள்ள மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வருகின்ற நவம்பர், டிசம்பர் மாதங்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தோடு, சில மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, கர்நாடகாவில், சிவமொக்கா, மண்டியா, பெல்லாரி ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி அனிதா ராமநகர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்தத் தொகுதியில் குமாரசாமி வெற்றி பெற்று இருந்தார். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால், ராமநகர் தொகுதியில் பெற்ற வெற்றியை வாபஸ் பெற்றார்.
இதில் காங்கிரஸ் கட்சி தலா ஒரு மக்களவை, சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகின்றது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி இரண்டு மக்களவை மற்றும் ஒரு சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
மக்களவை தொகுதிகள்:
சிவமொக்கா - மது பங்காரப்பா (மதசார்பற்ற ஜனதா தளம்)
மண்டியா - சிவரமே கவுடா (மஜத)
பெல்லாரி - வி.எஸ்.உக்ரப்பா (காங்கிரஸ்)
சட்டசபை தொகுதிகள்:
ராமநகர் - அனிதா குமாரசாமி (மஜத)
ஜமகண்டி - ஆனந்த் சிதா நியம கவுடா (காங்கிரஸ்)
“2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பு நடைபெறு அரையாண்டு தேர்வு போன்றது இந்தத் இடைத் தேர்தல்கள். காங்கிரஸ் தலைவர்களுடனான ஆலோசனைக்கு பிறகு ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்தோம்” என்றார் முதலமைச்சர் குமாரசாமி.
கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது ஆகும். காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே நீண்டகால உட்கட்சி பூசல் நடைபெறுவதாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.