நாங்கள் மன்னார்குடி மாஃபியாதான்… சசிகலா மருமகன் தடாலடி
திமுக எனும் மாபியா கும்பலுடன் மோத வேண்டிய தேவை இருப்பதால், தங்களை மன்னார்குடி மாபியா கும்பல் என்று அழைப்பது சரிதான் என சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாதான். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களுடனேயே இருக்கிறார். கட்சியின் தலைமை அலுவலகச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். அனைத்து மாவட்டச் செயலாளர்களும் சசிகலா சார்பிலேயே இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கோரி பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்து வருகின்றனர். தேவை ஏற்பட்டால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவைச் சந்திப்பார். கட்சி சசிகலாவின் கட்டுப்பாட்டிலேயேதான் இருக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான முடிவை சசிகலாவே எடுப்பார். அதிமுகவில் நான் உறுப்பினராக இருக்கிறேன். உரிய நேரத்தில் அரசியலில் நேரடியாக களமிறங்க இருக்கிறேன். முதல்வராக எடப்பாடி பழனிசாமி தொடர்வார். அதில் எங்களது தலையீடு இருக்காது. அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்கான சாத்தியமே இல்லை. ஓ.பன்னீர்செல்வம் ஏன் அப்படிச் செய்தார் என்பது எங்களுக்கு புரியவில்லை. ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் சசிகலாவுக்கு மட்டுமே முழுமையாக தெரியும். பாரதிய ஜனதா, திமுக ஆகியவை என்னதான் முயன்றாலும் இரட்டை இலை மீதான மக்களின் நம்பகத்தன்மையை குலைக்க முடியாது. ஜெயலலிதாவின் உயிரை எனது தந்தை திவாகரன் இரண்டு முறை காப்பாற்றி இருக்கிறார். கட்சி தற்போதும் சசிகலாவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. போயஸ் தோட்டம் சசிகலாவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. தீபாவிற்கோ, தீபக்கிற்கோ இதில் தொடர்பில்லை.நாங்கள் ஏற்கனவே வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சொத்துகளை புதிதாக குவிக்க வேண்டிய அவசியமில்லை. டிடிவி தினகரனுடன் சில கருத்து வேறுபாடுகள் இருப்பினும், குடும்பம் என்ற அடிப்படையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க மாட்டோம். சில அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே சசிகலா சிறை செல்ல நேரிட்டது. சட்டரீதியாக அதனை எதிர்த்து போராடுவோம் என்றார்.
கொடநாடு தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், எங்கள் பொறுப்பில் இருக்கும் இடத்திற்குள் இருக்கும் ஆவணங்களைத் நாங்களே திருட வேண்டிய அவசியம் என்ன? தேவை ஏற்பட்டால் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிடுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.