ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும்: முத்தரசன்
ஜெயலலிதாவின் வேதா நிலையம் மட்டுமின்றி அவரின் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடைமையை ஆக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனவும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் மட்டுமின்றி, அவரின் மற்ற சொத்துக்களையும் அரசுடைமை ஆக்க வேண்டும் என்றார். அரசியல் நெருக்கடி முற்றியுள்ளது என்பதை முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பு காட்டுகிறது என்றும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து இவர்களே சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டார்கள் என்றும் முத்தரசன் கூறினார்.
இதனிடையே முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து, போயஸ் தோட்ட வேதா நிலையத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.