ஜெ. கைரேகை உண்மைதானா?: தேர்தல் ஆணைய செயலாளர் விளக்கமளிக்க உத்தரவு
ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கில், அவரின் கைரேகையின் உண்மைத்தன்மை பற்றி அக்.6-ல் தேர்தல் ஆணைய செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக வெற்றிபெற்ற அதிமுகவின் சீனிவேல் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு முன்னரே உடல்நலக்குறைவால் காலமானார். இந்த தொகுதிக்கு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் இடைத்தேர்தல் வந்தது. தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னத்தை ஒதுக்க வேட்புமனுவுடன் படிவங்கள் ஏ மற்றும் பி-இல் வேட்பாளர் எந்தக் கட்சியை சார்ந்துள்ளாரோ, அக்கட்சியின் தலைவரோ அல்லது பொதுச்செயலாளரோ கையெழுத்திட வேண்டும்.
அப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று அவரின் கைரேகை வைக்கப்பட்டது. இதனையடுத்து இரட்டை இலை சின்னத்தை வேட்பாளர் போஸுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. அந்த தேர்தலில் போஸ் வெற்றிபெற்றார்.
இதனையடுத்து அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் போஸின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அதில், ஜெயலலிதாவின் கைரேகை போலி எனவும், அதன் உண்மைத் தன்மையை நிரூபிக்க கோரியும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா கைரேகையின் உண்மைத் தன்மை பற்றி அக்டோபர் 6-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தேர்தல் ஆணைய செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதே வழக்கில், ஏற்கனவே ராஜேஷ் லக்கானி ஆஜராகி விளக்கமளித்த நிலையில் தற்போது தேர்தல் ஆணைய செயலாளர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.