ஜெ.ஜெயலலிதா எனும் நான்... டாப் 20

ஜெ.ஜெயலலிதா எனும் நான்... டாப் 20
ஜெ.ஜெயலலிதா எனும் நான்... டாப் 20

இந்திய அரசியலில் தவிர்க்கவே முடியாத தலைமையாக கருதப்பட்டவர் ஜெயலலிதா. சினிமா துறையில் ஜாம்பவனான விளங்கிய அவர் தமிழக அரசியலிலும் யாரும் அசைத்து பார்க்க முடியாத பெரும் தலைவராக விளங்கினார். அவர் மறைந்து ஓராண்டை கடந்தபோதிலும் அதுதொடர்பான சர்ச்சைகளும் விவாதங்களுக்கும் இன்றுளவும் பஞ்சமில்லை. ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரின் சாதனைகளை சற்று நினைவு கூறலாம்.

1. கர்நாடக மாநிலம் மைசூரில் ஜெயராம்- சந்தியா தம்பதியருக்கு மகளாக 1948ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பிறந்தவர் ஜெயலலிதா. அவரது மூதாதையர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள்.

2. படிப்பில் படுசுட்டியாக விளங்கிய ஜெயலலிதாவிற்கு சட்டம் படிக்கவே ஆசை. ஆனால் வீட்டின் நிலை கருதி தனது தாயின் விருப்பத்திற்கிணங்க சினிமாவில் நுழைந்தார் அவர். 

3. இளம் வயதிலேயே திரையுலகில் நுழைந்த ஜெயலிலதா, எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட அன்றைய முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். அப்போது அதிக சம்பளம் வாங்கிய நடிகைகளில் முதன்மையானவராக இருந்தார்.

4 1982-ம் ஆண்டு அதிமுகவில் தம்மை இணைத்துக் கொண்ட அவர், அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக உயர்ந்தார்.

5. 1984-ம் ஆண்டு ராஜ்யசபாவில் முதன் முதலில் அவர் ஆற்றிய உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் பேசும் திறன்கொண்டவர் ஜெயலலிதா.

6. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா, தமிழக அரசியலில் கருணாநிதிக்கு மாற்றான அரசியல் சக்தியாக தம்மை நிலைநிறுத்திக் கொண்டார்.

7. 1991-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக முதல் முறையாக பொறுப்பேற்றார். ஆனாலும், பல்வேறு புகார்களால் அடுத்து வந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது.இதையடுத்து திமுகவின் 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார்.

8. 2001-ம் ஆண்டு நான்கு தொகுதிகளில் ஜெயலலிதா தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.

9. 2001-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக மீண்டும் பதவியேற்ற ஜெயலலிதா, டான்ஸி வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக பதவி விலகினார். வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலை‌யில் 2002-ம் ஆண்டு 3-வது முறையாக மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.

10. 2006-ல் ஆட்சியை இழந்தாலும், மக்களின் நம்பிக்கையை சம்பாதித்து 2011-ம் ஆண்டு 3-வது முறையாக அவர் முதலமைச்சரானார்.

11. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததால் ஜெயலலிதா சிறை செல்ல நேர்ந்தது. இதனால் முதலமைச்சர் பதவியை ஜெயலலிதா இழக்க நேரிட்டது.

12. சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

13. இதனையடுத்து 2015ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு 5-வது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியில் அமர்ந்தார் ஜெயலலிதா.

14. 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா மீண்டும் மகத்தான வெற்றி பெற்று 6-வது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார்.

15. உடல்நலக் குறைவால் 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் சிகிச்சை பலனின்றி 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி உயிரிழந்தார்.

16. தமிழக முதலமைச்சராக இருந்தபோது பெண்களின் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்த ஜெயலலிதா, தொட்டில் குழந்தைத் திட்டம், மகளிர் காவல் நிலையம் போன்ற திட்டங்களை செயல்படுத்தினார்.

17,விளையாட்டுத் துறையின் மீது அவருக்கு தனிக் கவனம் உண்டு. அரசியல் பங்களிப்புக்காக பல்வேறு பல்கலைக் கழகங்கள் ஜெயலலிதாவுக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன.

18. தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமை ஜெயலலிதாவுக்கு உண்டு.

19. தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் ஜெயலலிதாவை சாரும்.

20. தன் வாழ்க்கையில் திருமணம் என்ற பந்தத்திற்குள் ஜெயலலிதா நுழையவே இல்லை. 33 ஆண்டுகாலம்  ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக சசிகலா திகழ்ந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com