ஜெ. வீடியோ விவகாரம்: வெற்றிவேல் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில் முன்ஜாமீன் கேட்டு வெற்றிவேல் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கடந்த 20 ஆம் தேதி வெளியிட்டார். இதுதொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பிரவீண் நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிந்தனர். இதே போன்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் விசாரணை ஆணையத்தின் செயலாளர் பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் வெற்றிவேல் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல் துறையினர் தன்னை கைது செய்துவிடாமல் இருக்க தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னையில் உள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் வெற்றிவேல் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுபாதேவி, மனுதாரர் வெற்றிவேலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.