ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்: அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஜெயலலிதாவின் மரணத்திற்கு அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் குறித்து அமைச்சர்கள் உட்பட அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது, “அனைத்து கேள்விகளுக்கும் விசாரணை ஆணையம் பதிலளிக்கும். விசாரணை ஆணையம் அமைக்கவில்லை என்றால் நான் பதிலளித்திருப்பேன், ஆணையம் அமைக்கப்பட்ட பின்னர் பதிலளிக்க நான் நீதிபதி அல்ல. தினகரன் தரப்பிடம் வீடியோ ஆதாரம் இருந்தால் ஆணையத்திடம் வழங்கட்டும். அதனை சரியா, தவறா என்பது குறித்து ஆணையமே முடிவு செய்யும்.” என்று தெரிவித்தார்.
அமைச்சர் ஒ.எஸ்.மணியன், “ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது நாங்கள் அப்பல்லோ நிறுவனர் பிரதாப் ரெட்டியிடம் தகவல்களை கேட்போம், அத்துடன் சுகாரதாரத்துறை செயலரிடமும் தகவல்களை கேட்போம். அவர்கள் சிகிச்சை குறித்த தகவல்களை தெரிவிப்பார்கள்.” என்று கூறினார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ, “ஜெயலலிதா மரணத்தால் நாங்கள் மனம் நொந்து இருக்கிறோம். எனவே ஜெயலலிதாவின் மரணம் குறித்து விமர்சிக்க விரும்பவில்லை.” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், “ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை அறிக்கை எப்போது வெளிவரும்? விசாரணை ஆணையம் அமைக்கும் போதே, அறிக்கை சமர்பிக்கும் கால வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும். அறிக்கையின் விவரங்களை மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “ஜெயலலிதா மரணத்தின் சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்பது நல்ல எண்ணம். முதலமைச்சர் கூறியது போல விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறார். ஜெயலலிதா மரணம் குறித்த குழப்பத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் ஜெயலலிதாவின் மரணம் அரசியலுக்கு பயன்படுத்தப்படும், அது சரியானது அல்ல.” என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை நேர்மையான முறையில் நடைபெற வேண்டும். அதற்கு முதலமைச்சர் குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயிக்க வேண்டும். இந்த ஆணையம் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரையும் விசாரிக்கும் என்று நம்புகிறேன்.” என்று கூறினார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஜெயலலிதா மரணத்தில் தொடக்கத்திலிருந்தே ஒவ்வொருவரும் மாறி மாறி பேசி வருகின்றனர். ஜெயலலிதா மரணமடைந்த போது, சசிகலாதான் காப்பற்ற வேண்டும் என்று கூறினர். தற்போது ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலாதான் காரணம் என்று கூறுகின்றனர். தற்போது நடப்பது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும், பணத்தை பாதுக்காத்துக்கொள்ளவும் நடைபெறும் போராட்டம் என்பதால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.” என்று விமர்சித்தார்.