வீடியோ வெளியீடு அரசியல் ஆதாயத்திற்காக அல்ல: வெற்றிவேல்
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீடியோ காட்சி வெளியிட்டது அரசியல் ஆதாயத்திற்கு இல்லை என டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வீடியோ வெளியிடப்பட்டதற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்தான் காரணம் என சிலர் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா தரப்பினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறி வந்தனர்.
ஜெயலலிதா இறுதியாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி ஆர்.கே.நகர். அவரது மறைவுக்கு பிறகு அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த விடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் தற்போது சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இதன் மூலம் தினகரன் தரப்பினர் தேர்தலை கருத்தில் கொண்டே இந்த வீடியோ வெளியிட்டுள்ளதாக அதிமுக அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால் தேர்தலுக்கு வீடியோ வெளியிட்டதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என வெற்றிவேல் தெரிவித்துள்ளார். அவ்வாறு அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்றால் கடந்த தேர்தலிலே வெளியிட்டிருப்போம் என வெற்றிவேல் கூறியுள்ளார்.