சாபத்தை போக்கிய நெல்சன்.. இமாலய வசூலை தொடுகிறதா ஜெயிலர் 2? ட்ரோலுக்கு ஆளான லோகேஷ் கனகராஜ்!
செய்தியாளர் - கார்த்திகேயன்
நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். அனிருத் இசையிலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படம், 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, அந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படமாக மாறியது. இந்த அளவு பெரிய வெற்றிப் பெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக, முதலில் அறிவித்தபோது, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு காரணம் என்னவென்றால், ஒரு நல்ல திரைப்படத்தை சீக்வெல் எடுக்கிறேன் என்கிற பெயரில், கெடுத்துவிட வேண்டாம். இதற்கு முன்பு, இந்தியன் 2, பில்லா 2, சந்திரமுகி 2 போன்ற பல்வேறு திரைப்படங்கள், 2-ஆம் பாகம் எடுக்கும்போது மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன.
எனவே, இந்த படத்திலும், அப்படி நடந்துவிடக் கூடாது என்று எதிர்பார்த்தனர். மேலும், தமிழ் சினிமாவில் அப்படி ஒரு சாபம் உள்ளது என்று கூறி வந்தனர். ஆனால், தற்போது ரிலீஸ் ஆகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம், தமிழ் சினிமாவின் அந்த சாபத்தை தவிடுபொடியாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள், சாதாரண மக்கள் என்று பல்வேறு தரப்பினர், அந்த திரைப்படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். தற்போது வந்துள்ள தகவலின்படி, படம் வெளியான இரண்டே நாட்களில் 210 கோடி ரூபாயை வசூலித்துள்ள இந்த திரைப்படம், அடுத்தடுத்த விடுமுறை நாட்களால், ஆயிரம் கோடி என்ற இமாலய இலக்கை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது நடந்தால், தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி திரைப்படம் என்று சாதனையும் படைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜை, ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். கூலி திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்ததாலும், அடுத்தடுத்த படங்களில் திரைக்கதையில் சொதப்புவதாலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜை ட்ரோல் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, ஜெயிலர் 2 படத்திற்கு வடஇந்தியாவில் குறைவான திரைகள் தான் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் ஆயிரம் கோடி வசூலை அடைவதில் சில சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால், இந்த விஷயத்தை கையில் எடுத்து, பல்வேறு மீம்ஸ்களை நெட்டிசன்கள் போட்டு வருகின்றனர். இவ்வாறு பல்வேறு கண்டென்ட்-களை இணையவாசிகளுக்கு எடுத்துக் கொடுத்திருப்பதோடு, ரசிகர்களையும் பெருமளவில் ஜெயிலர் 2 திரைப்படம் திருப்திபடுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

