இந்திரா காந்தியின் 100-வது பிறந்தநாளை கொண்டாடாத ‘ஷேம் இந்தியா’: ப.சிதம்பரம் சாடல்
இந்திரா காந்தியின் 100-வது பிறந்தநாளை கொண்டாடாத இழிவான இந்தியா என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம், “மற்ற எந்த பிரதமர்களையும் விட அதிக சோதனைகளை சந்தித்தவர் இந்திரா காந்தி. மற்ற பிரதமர் செய்ய முடியாததையும் துணிச்சலாக செய்தவர். அவர் சில செயல்களை மிகவும் வெற்றிகரமாக செய்து முடித்தார். எமர்ஜென்சி முடிவை எடுத்து தவறு செய்துவிட்டார். அந்த தவறினை பின்னர் அவர் உணர்ந்து கொண்டார். மீண்டும் அதுபோன்ற நடவடிக்கைகள் செய்யமாட்டேன் என்று உறுதி அளித்தார்” என்று கூறினார்.
மேலும், “நாட்டின் ஒரே பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் 100-வது பிறந்தநாளை நாடு கொண்டாடாதது அவமானமானது ஆகும். மத்திய அரசும் அவரது நூறாவது பிறந்தநாளை கொண்டாடவில்லை. எந்த அரசு அவரது பிறந்தநாளை கொண்டாடியதாக என்று எனக்கு தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி மட்டும் தனது வழியில் கொண்டாடியது. ஆனால் ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டை ரஷ்யா கொண்டாடியது போல் நாடு இந்திராவின் நூறாவது பிறந்தநாளை கொண்டாடவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

