சென்னை ராயபுரத்தில் உள்ள குக்கர் கடையில் தேர்தல் பார்வையாளர்களுடன் வருமான வரி அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தினர்.
ஆர்.கே.நகர் தேர்தலில் வருகின்ற டிசம்பர் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அதிமுக, திமுகவை சேர்ந்த தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டிடிவி தினகரனும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராயபுரத்தில் அதிகளவில் குக்கர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் தேர்தல் பார்வையாளர்கள், வருமான வரித்துறையினர் கடைகளில் இன்று சோதனையில் ஈடுபட்டனர். வாக்களர்களுக்கு குக்கர் கொடுப்பதற்காக டோக்கன் வழங்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த முறை நடைபெறவிருந்த தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் தினகரன் போட்டியிட்ட போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் அவருக்கு தொப்பி சின்னம் வழங்கப்பட்டது. அப்போது, தினகரன் தரப்பினர் சார்பில் மக்களுக்கு தொப்பி வழங்கப்பட்டது. அவரும் தொப்பியுடனே வலம் வந்தார். இந்த முறை சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.