சசிகலா மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான இடங்களில் 3வது நாளாக இன்றும் வருமானவரித் துறையினரின் சோதனை தொடர்கிறது.
சென்னையில் இளவரசியின் மகன் விவேக் நிர்வகிக்கும் ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் மற்றும் அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீடு, மற்றொரு மகள் ஷகிலாவின் நிர்வாகத்தில் இருப்பதாகக் கூறப்படும் மிடாஸ் நிறுவனத்தில் சோதனை நடைபெறுகிறது. நமது எம்ஜிஆர் அலுவலகத்திலும் சோதனை தொடர்கிறது. நீலாங்கரையில் உள்ள டிடிவி தினகரனின் சகோதரர் பாஸ்கரன் வீட்டில் கணக்கில் வராத தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே பகுதியில் ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார் வீட்டில் சோதனை முடிவுக்கு வந்தது. தஞ்சையில் சசிகலாவின் கணவர் எம்.நடராஐன் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என 7 பேர்களின் வீடுகளில் நடைபெற்ற சோதனை முடிவுக்கு வந்தது. நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் இன்றும் சோதனை தொடர்கிறது. புதுச்சேரியில் டிடிவி தினகரனின் பண்ணை வீடு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திவாகரனின் வீடு மற்றும் கல்லூரிகளில் சோதனை தொடர்கிறது. நாமக்கலில் சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

