நீட் விவகாரத்தில் துணை ஜனாதிபதி தேர்தலை வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்: ஸ்டாலின்
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குப் பெற துணை ஜனாதிபதி தேர்தலை வைத்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குப் பெற ஜனாதிபதி தேர்தலின்போதே அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டனர். இப்போது ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை. வருகின்ற துணை ஜனாதிபதி தேர்தலை வைத்தாவது அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை சட்டமன்ற கூட்டத்தொடரின்போதே வலியுறுத்தி இருக்கிறேன். ஆனால் அதை செய்யாமல் போட்டி போட்டுக்கொண்டு பதவியைக் காப்பாற்றிக் கொள்வதையே வேலையாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். பதவியில் இருந்தால்தான் தொடர்ந்து ஊழல் செய்ய முடியும், தொடர்ந்து கமிஷன் வாங்க முடியும். தொடர்ந்து கொள்ளையடிக்க முடியும். இப்போது அந்தப் பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய அரசு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்போவதாக வருகின்ற தகவல்கள் குறித்த கேள்விக்கு, “முதலமைச்சர்தான் அந்நிறுவனத்திற்கு தலைவர். சட்டமன்றத்தில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அப்படி எதுவும் நடக்காது என்று உறுதியளித்துள்ளார்” என்று ஸ்டாலின் கூறினார்.