மத்திய அரசின் திட்டங்களில் நடக்கும் ஊழலை தடுக்கவே ஆளுநர் ஆய்வு: ஹெச்.ராஜா
மத்திய அரசு மாநிலத்திற்கு வழங்கும் திட்டங்களில் ஊழல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆளுநரின் ஆய்வும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா குறிப்பிட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் அரசு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில் இன்று 2ஆவது நாளாக சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்தார். கோவை காந்திபுரத்தில் பயோ-டாய்லெட் திட்டம் குறித்து ஆய்வு செய்தவர். துடைப்பத்தை கையிலெடுத்து பேருந்து நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். ஆளுநரின் இந்த செயல்பாடுகள் தமிழக அரசு நிர்வாகத்தில், உரிமையில் தலையிடும் அத்துமீறல் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
இந்நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “மேதகு ஆளுநர் கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது இயல்பானது, வரவேற்கத்தக்கது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கின்றனர். மத்திய அரசு திட்டங்களில் ஊழல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆளுநரின் ஆய்வு அதிகரிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.