கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டன் - ஸ்ரீசாந்த் பரிந்துரை.!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று டெல்லி அணிக்கு எதிராக இரண்டாவது தோல்வியை சந்தித்தது. இதனால் முன்னாள் கிரிக்கெட் விரர் ஸ்ரீசாந்த், கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டனை பரிந்துரைத்துள்ளார்.
ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 229 ரன்களை இலக்காக கொண்டு ஆடியது. ஒரு கட்டத்தில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 4 ஓவர்களில் வெற்றிபெற 60 க்கு மேல் தேவைப்பட்ட நேரத்தில் இயோன் மோர்கன் மற்றும் ராகுல் திரிபாதி கூட்டணி சிறப்பாக விளையாடி அணிக்கு நம்பிக்கையை தந்தது. ஆனாலும் டெல்லி அணியின் அன்ரிச் நார்ட்ஜே மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸின் சிறப்பான பந்துவீச்சால் கே.கே.ஆர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டிக்கு பின்னர், இயோன் மோர்கன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக வழிநடத்த வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் எஸ்.ஸ்ரீசாந்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பை வென்றுதந்த கேப்டன் இயோன் மோர்கனை அணியின் தலைவராக வைத்திருப்பது நிச்சயமாக கொல்கத்தா அணிக்கு உதவும் என்றும் கூறியுள்ளார்.
தோனி, ரோகித் சர்மா, கோலி போன்ற சிறப்பான வீரராக மோர்கன் இருப்பார் என்றும் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். கொல்கத்தா அணி வரும் புதன்கிழமை தங்களின் அடுத்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது.