குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி, இந்திரா காந்தியை விமர்சித்து தனது உரையில் பேசினார்.
3 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மார்பி பகுதியில் மோடி தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை இன்று மேற்கொண்டார். ஹெலிகாப்டர் மூலம் மார்பி தொகுதிக்கு வந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 4 பொதுக்கூட்டங்களில் மோடி இன்று பிரச்சாரம் செய்ய உள்ளார்.
மார்பியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, “மார்பி தான் குஜராத் மாடலுக்கு முக்கிய உதாரணம். என்னுடைய 13 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு முக்கிய வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வரும் போது, குட்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் குடிநீர் பிரச்னை முக்கியமானதாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் குடிநீர் பம்புகளே வழங்கப்பட்டிருந்தது. பாஜக ஆட்சியில் பெரிய அளவில் விவசாய பணிகள் நடைபெற்றுள்ளது. குடிநீர் வசதிக்காக பைப் லைன்கள் போடப்பட்டுள்ளது. இந்திரா காந்தி இந்த பகுதிக்கு வந்த போது துர்நாற்றம் தாங்க முடியாமல் தனது கைகுட்டையால் மூக்கை மூடிக் கொண்டார். நாங்கள் ஆட்சியில் இல்லாத காலத்திலும் மக்களோடு மக்களாக நின்று சேவை செய்தோம்” என்று கூறினார். இந்திரா காந்தி குறித்து பேசிய போது, மோடி தனது மூக்கை கையால் மூடிக் கொண்டு கிண்டல் தொனியில் பேசினார்.
குஜராத் மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 9, 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு நெருங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி இன்று தனது முதல் பிரச்சாரத்தை குஜராத்தில் மேற்கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஹர்திக் பட்டேல் ஆகியோரும் இன்று பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஹர்திக் பட்டேலும் மார்பி பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். ஆயிரக்காணக்கான மக்கள் பங்கேற்க பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.