ஸ்டார்ட்.. ரோலிங்.. ஆக்ஷன்.. : ஒட்டுமொத்த கிராமமும் யூடியூபர்ஸின் ஹப்பான கதை தெரியுமா?
இண்டெர்நெட்டின் பயன்பாடு அதிகரித்ததை அடுத்து திரும்பின பக்கமெல்லாம் சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களே அதிகமாக இருக்கிறார்கள். திறமையை வெளிக்காட்டவும் நல்ல சம்பாத்தியத்தை பார்க்கவும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அந்த வகையில் ஒட்டுமொத்த கிராமமே யூடியூபர்களின் மையமாகவே இருக்கிறது. அதுவும் இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில். ஆம், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துஸ்லி என்ற கிராமத்தில் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட யூடியூபர்கள் இருக்கிறார்கள்.
அது பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் கல்வியறிவை புகட்டும் வகையிலான வீடியோக்களையும் இந்த துஸ்லி கிராமத்து யூடியூபர்கள் உருவாக்குகிறார்களாம். இந்த யூடியூப் கலாசாரம் ஞானேந்திர சுக்லா மற்றும் ஜெய் வெர்மா என்ற இருவர் மூலமாகத்தான் முதலில் துஸ்லி கிராமத்தில் துளிர்த்திருக்கிறது. அதன்படி சுக்லா எஸ்.பி.ஐ. வங்கியிலும், ஜெட் வெர்மா ஆசிரியராகவும் இருந்தவர்களாம்.
இது தொடர்பாக பேசியுள்ள சுக்லா, “முதலில் எஸ்.பி.ஐயில் நெட்வொர்க் இன்ஜினியராக பணியாற்றினேன். அப்போது ஆஃபிஸில் இண்டெர்நெட் சேவை இருந்ததால் வேலை நேரம் போக யூடியூபில் வீடியோ பார்த்து வந்தேன். என்னுடைய 9-5 வேலையிலும் எனக்கு சொல்லிக்கொள்ளுமளவுக்கு திருப்தியாக இருக்காததால் எஸ்.பி.ஐ. வேலையை விட்டுவிட்டு யூடியூப் சேனல் தொடங்கினேன்.
2011-12ம் ஆண்டின் போது புது வெர்ஷனில் யூடியூப் இருந்த போதும் ஈர்க்கும் அளவுக்கான வீடியோக்கள் அரிதாகவே இருக்கும். அதனால் நானே ஒரு யூடியூப் சேனல் தொடங்கினேன். இது வரையில் 250 வீடியோக்களை பதிவேற்றியுள்ளேன். 1.15 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
”இருப்பினும் சேனல் தொடங்கப்பட்ட போது எதும் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் கேமரா முன் தோன்ற எனக்கும் சில தயக்கங்கள் இருந்தன. பிறகு கிராமத்தில் உள்ள பெரியவர்கள் சிலர் ராம்லீலா நாடகத்தில் நடிக்க வைத்ததற்கு பிறகு ஒரு நம்பிக்கை வந்தது.” எனவும் சுக்லா தெரிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேசியுள்ள ஜெய் வெர்மா, “எங்களை பார்த்து கிராமத்தில் உள்ள பலரும் வீடியோ எடுத்து பதிவிட தொடங்கிவிட்டார்கள். யூடியூபை போல டிக்டாக், இன்ஸ்டா ரீல்ஸும் பெரியளவில் உதவிக்கரமாக இருக்கிறது. நான் வேதியியலில் MSc பட்டபடிப்பு முடித்திருக்கிறேன். ஆசிரியராக இருந்தபோது மாதத்திற்கு வெறும் 12,000-15,000தான் சம்பளமாக வரும். ஆனால் இப்போது 30,000-35,000 வரை வருமானம் வருகிறது.” எனக் கூறியுள்ளார்.
இதேபோல, பிங்கி சாஹு என்பவர் பேசும் போது, “பெண்களும் தங்களது திறமைகளை வெளி உலகுக்கு தெரியப்படுத்த யூடியூப் சேனல்கள் பெரிதும் உதவுகின்றன. இங்கு 40 யூடியூப் சேனல்கள் நடத்துவோர் இருக்கிறோம். பொதுவாக இந்த ஊரில் பெண்கள் வெளியே வருவதற்கு அனுமதிக்க மாட்டார்கள் ஆனால் யூடியூப் சேனல்கள் மூலம் அது சாத்தியமாகியிருக்கிறது.” என பெருமையுடன் தெரிவித்துள்ளார்.