பாஸ்போர்ட் ரெடி... இத்தாலி பறக்கிறது இந்திய தெருநாய்! பெண் எழுத்தாளரின் நெகிழ்ச்சி செயல்!

"பரிதாபத்துக்குரிய இந்த உயிரினத்தின் மீது நடத்தப்படும் கொடுமைதான், என்னை அதை தத்தெடுக்க வைத்தது" என்று இத்தாலி எழுத்தாளர் வேரா தெரிவித்துள்ளார்.
இத்தாலி செல்ல உள்ள இந்திய தெருநாய்
இத்தாலி செல்ல உள்ள இந்திய தெருநாய்Twitter

இந்திய தெருக்களில் பெரும் துயரில் வாழ்ந்து தவித்துவந்த நாய் ஒன்று, இப்போது விமானத்தில் இத்தாலி சென்று உரிமையாளர் ஒருவரின் பராமரிப்பில் வாழப்போகிறது என்றால் நம்பமுடிகிறதா? அப்படியொரு சம்பவம்தான் வாரணாசியில் நடந்துள்ளது.

இந்தியர்கள் பலரும் தங்களின் வீடுகளில் ஜெர்மன் ஷெப்பர்ட், புல்டாக், கோல்டன் ரெட்ரீவர், பூடில் (Poodle), ஷிஹ் சூ, PUG நாய், ஆங்கில மாஸ்டிஃப் போன்ற அயல்நாட்டு நாய் வகைகளை வளர்ப்பதில் பெருமை கொள்வதுண்டு. இவர்களில் சிலர் தெருக்களில் தவிக்கும் நாய்களை அதிகம் கண்டுகொள்ள மாட்டார்கள். அதிலும் சிலரெல்லாம், தெருநாய்கள் உணவுக்காக பல வீதிகளிலும் சுற்றி திரிந்து காயப்படுவதை கண்டும் காணாமலும் செல்வர்.

இப்படி இந்தியாவில் காயம்படும் தெருநாய்களை எண்ணி, கடந்த 10 ஆண்டுகளாக துயருற்று வந்துள்ளார் இத்தாலியை சேர்ந்த எழுத்தாளரான வேரா லாசரெட்டி என்பவர். தனது ஆராய்ச்சிப் பணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொருமுறை இவர் இந்தியா வரும்போதும், இங்குள்ள தெரு நாய்களின் நிலைமையை கண்டு மனம் நொந்துள்ளார். இதில் இந்தமுறை இந்தியா வந்தபோது, தன்னாலான முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென முடிவு செய்துள்ளார்.

இதற்காக இந்திய தெரு நாய் ஒன்றை தத்தெடுத்து தன்னுடன் வெளிநாட்டுக்கு அழைத்துப்போக திட்டமிட்டுள்ளார் அவர். அதன்படி வாரனாசியில் வீதிகளில் சுற்றித்திருந்த ஒரு நாயை தத்தெடுத்து அதற்கு மோதி (Moti) என்று பெயரிட்டு தன்னுடன் இத்தாலி கூட்டி செல்ல முடிவெடுத்துள்ளார். இது குறித்து எழுத்தாளர் வேரா கூறும்பொழுது, “பரிதாபத்துக்குரிய இந்த உயிரினத்தின் மீது நடத்தப்படும் கொடுமைதான், என்னை அதை தத்தெடுக்க வைத்தது” என்றுள்ளார்.

தற்போது மோதியை அழைத்துச் செல்ல சர்வதேச அளவில் ஏற்பாடுகள் செய்துள்ளதுடன், அதற்கான முறையான பாஸ்போர்ட்டும் பெற்றிருக்கிறார் எழுத்தாளர் வேரா லாசரெட்டி. கூடியவிரைவில், வேரா லாசரெட்டியுடன் மோதி டெல்லியில் இருந்து இத்தாலிக்கு விமானத்தில் பறக்கவுள்ளது!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com