பதக்க கனவுகளுடன் டோக்கியோ சென்றது இந்திய ஒலிம்பிக் குழு
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் இந்திய வீரர், வீராங்கனைகள் கொண்ட ஒலிம்பிக் குழு ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு சென்றடைந்தது.
32-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23-ஆம் தேதி டோக்கியோவில் தொடங்க உள்ள நிலையில், ஒவ்வொரு நாட்டு அணியும் சென்றடைகின்றன. இந்திய தரப்பில் 228 போ் கொண்ட குழு ஒலிம்பிக்கில் பங்கேற்கிறது. முதல் கட்டமாக 88 போ் கொண்ட இந்தியக் குழு, சனிக்கிழமை டெல்லியில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை டோக்கியோ சென்றடைந்தது. அவா்களை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரீந்தர் பத்ரா, செயலா் ராஜீவ் பாட்டியா ஆகியோர் வழியனுப்பினர்.
இந்திய நட்சத்திரங்கள் பி. வி. சிந்து, மேரிகோம், மனிகா பத்ரா, தீபிகா குமாரி உள்ளிட்டோரும் முதல் குழுவில் இடம் பெற்றனர். இந்திய அணியினர் முகக்கவசம் அணிந்தும், சிலர் முகத்துக்கு ஷீல்டும் அணிந்து காணப்பட்டனா். படகு பந்தய அணியைச் சோ்ந்த நேத்ரா குமணன், விஷ்ணு சரவணன், வருண் தக்கர், கேசி, கணபதி ஆகியோரும் சென்றுள்ளனர்.