“இந்தியா மீண்டும் வென்று விட்டது” - ட்விட்டரில் மோடி
மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் சூழ்நிலை எழுந்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தேர்தல் முடிவு குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, ''நாம் ஒன்றிணைந்து வளமையான, வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வென்று விட்டது'' என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவர், ''எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்கள், அவதூறுகள், உறுதியற்ற அரசியலுக்கு எதிராக இந்திய மக்கள் ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். சாதியவாதத்திற்கு எதிரான அரசை தேர்ந்தெடுத்ததையே இந்தியர்களின் தேர்வு காட்டுகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.