வருமானவரி சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது: திருமாவளவன்
வருமான வரித்துறையினரின் சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையாகத் தான் பொதுமக்களால் பார்க்கப்படுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், " ஆள்பவரின் விருப்பு, வெறுப்புக்கேற்ப தம்மை எதிர்ப்பவர்களை, விமர்சிப்பவர்களை அச்சுறுத்த வருமான வரித்துறையை பயன்படுத்துவது அந்தத் துறையின் நன்மதிப்பை சீர்குலைப்பதாகும். வருமான வரித்துறையினரின் சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையாகத் தான் பொதுமக்களால் பார்க்கப்படுகிறது. பாஜக அரசு இத்தகைய போக்குகளை கைவிடுவது நல்லது. பிரச்னைகளை திசைதிருப்ப, வேண்டாதவர்களை அச்சுறுத்த, தமது ஆட்சி நிர்வாகத்தின் தோல்விகளை மறைப்பதற்காக மத்திய அரசு இப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தான் இந்தச் சோதனையை கருத வேண்டியிருக்கிறது" என திருமாவளவன் தெரிவித்தார்.
ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், சசிகலா உறவினர் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.