பக்கோடா விவாதத்தை அமித்ஷா நாடாளுமன்றத்துக்கு கொண்டு வந்தார்.
நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் எப்படியாவது பேசிவிட வேண்டுமென்று முடிவு செய்திருந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, இன்றைக்கு தனது கன்னிப்பேச்சை தொடங்கினார். வழக்கம் போல காங்கிரஸை தாக்கிப் பேச ஆரம்பித்தார். 55 ஆண்டுகளாக காங்கிரஸ் நாட்டை ஆண்டது, ஆனால் எந்த வேலை வாய்ப்பையும் உருவாக்கவில்லை; அப்படியெனில் அது யார் குற்றம்? என கேள்வி எழுப்பினார்.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய தொலைகாட்சி பேட்டி ஒன்றில், தினமும் ஒருவர் பக்கோடா விற்று , வீட்டுக்கு 200 ரூபாய் கொண்டு செல்வதை வேலை வாய்ப்பு என்று எடுத்துக் கொள்ள முடியாதா என கேட்டிருந்தார். அவ்வளவுதான் ”பக்கோடா” என்ற சொல்லாடலை வைத்து பிரதமரையும், பாஜக தலைவர்களையும் கேலி செய்ய ஆரம்பித்தனர் காங்கிரஸ் கட்சியினர். இப்போது வரை இந்தக் கேலிப்பேச்சுகள் தொடர்கிறது.
இந்தச் சூழலில்தான், நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷாவும் தன் பங்குக்கு பக்கோடா பேச்சில் தன்னை இணைத்து கொண்டார். பக்கோடா விவாதத்தை நாடாளுமன்றத்துக்கு கொண்டு சேர்த்தார். அதோடு, பக்கோடா விற்பது ஒன்றும் கேவலமான செயல் அல்ல என்றும் எந்த வேலைக்கும் செல்லாமல், செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் பக்கோடா விற்பது என்பது அவற்றை விட மேலான விஷயம் என்றார்.