சர்ச்சைக்குரிய பாபர் மசூதி - ராமர் கோவிலுக்கு சென்றார் யோகி ஆதித்யநாத்
ராமஜென்மபூமி என்று கருதப்படும் சர்ச்சைக்குரிய இடமான பாபர் மசூதி உள்ள இடத்திற்கு சென்றார், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை தொடங்கி பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 12 பேர் விசாரணையை எதிர்கொண்டுவரும் நிலையில் முதல்வர் யோகியின் ராமர் கோவில் பயணம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தற்காலிக ராமர் கோவிலுக்கு திடீர் விஜயம் செய்த யோகி ஆதித்யநாத், கடவுள் வழிபாடு நடத்தினார். 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தற்காலிக கோவிலுக்கு ஒரு முதலமைச்சர் சென்றுள்ளார். 1991 ஆம் ஆண்டு கல்யாண் சிங் முதலமைச்சராக இருந்தபோது அப்போதைய அமைச்சரவையில் இருந்த உறுப்பினர்களுடன் அங்கு சென்றார். அதன்பிறகு 26 ஆண்டுகள் கழித்து யோகி சென்றுள்ளார்.
யோகி ஆதித்யநாத் சராயு ஆற்றில் பயணித்து ராமர் கோவிலில் சுமார் 30 நிமிடங்கள் பிராத்தனை செய்தார். முதலில் ஹனுமான்கார் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியபின் ராமஜென்மபூமிக்கு அவர் சென்றார் என்று பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்ட வழக்கு விசாரணை தொடங்கப்பட்டு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.