பரபரப்பான சூழலில் முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
முதலமைச்சரை மாற்றக் கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கடந்த 22 ஆம் தேதி ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்துவிட்டு கர்நாடகாவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். இவர்களில் எம்எல்ஏ ஜக்கையன் மட்டும், மீண்டும் பழனிசாமி அணிக்கே மாறியுள்ளார். பழனிசாமிக்கான ஆதரவை திரும்பப் பெற்ற விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்கான கெடு இன்றுடன் முடிவடைகிறது. அதேபோல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக் கோரி, திமுக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழக அரசியல் நிலவரம் பரப்பரப்பாக காணப்படும் இந்த தருணத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.