அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?

அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து நடத்திய பிரமாண்ட பேரணி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. அலைகடலென திரண்டியிருந்த மக்கள் கூட்டம் அவ்விரு கட்சிகளின் பலத்தை பறைசாற்றியது. இந்தப் பேரணியில், அரசியல் புதுமுகம் அப்பாஸ் சித்திக் இடம்பெற்றிருந்தார். மேடையில் வீற்றிருந்த தலைவர்களில் ஒருவராக காட்சியளித்த சித்திக், பேரணியில் தனது ஆதரவாளர்களுடன் மிகப்பெரிய கூட்டத்தை திரட்டியிருந்தார்.

மேற்கு வங்க தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் வார்த்தைப் போர் நிலவி வருகிறது. இதனிடையேதான் புதிதாக உருவான இந்திய மதச்சார்பற்ற முன்னணி (Indian Secular Front) கட்சியுடன் இடதுசாரி - காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இந்தக் கட்சியைத் தொடங்கியுள்ளவர் முஸ்லிம் மதகுரு அப்பாஸ் சித்திக்.

சித்திக் முதலில் அசாசுதீன் ஓவைஸி கட்சியுடன் கூட்டணி மேற்கொள்ள முயற்சி செய்தார். ஆனால் காங்கிரஸ், இடதுசாரி அழைக்கவே, அந்தக் கூட்டணியில் இணைந்துள்ளார்.

சித்திக் கட்சித் தொடங்கும்போது பழங்குடியினர் மற்றும் தலித் தலைவர்களையும் இணைத்துக் கொண்டார். தெற்குபர்கனா, வடக்கு பர்கனா, ஹூக்ளி, புர்த்வான், ஹவுரா, பிர்பும் போன்ற தெற்கு வங்காள மாவட்டங்களில் இவருக்கு ஓரளவுக்குச் செல்வாக்கு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர.

சித்திக்கை மதவாத சக்தி என கூறுகி, காங்கிரஸ் - இடதுசாரி கட்சிகளின் 'செக்யூலர்' கோஷத்தை கேள்வி எழுப்புகிறது பாஜக. ஆனால், இடதுசாரிகளோ சித்திக்கை பொதுவான நபர் என்று கூறிவருகிறார்கள். சித்திக்கை மட்டுப்படுத்தி, அவருக்கு இருக்கும் செல்வாக்கை குறைக்க பார்க்கிறது பாஜக - ஆர்.எஸ்.எஸ். என்று சித்திக்கு இடதுசாரிகள் ஆதரவாக துணை நிற்கின்றனர்.

ஆனால், சித்திக், காங்., இடதுசாரி கூட்டணியில் இணைந்தது தங்களுக்கு சாதகமானதாக பார்க்கிறது பா.ஜ.க. காரணம், இந்தக் கூட்டணி அமைவதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸின் முஸ்லிம் வாக்குகளை எளிதாக சிதறடிக்க முடியும் என கருதுகிறது. தங்களுக்கு அமைந்த வாய்ப்பாகவும் பார்க்கிறது பா.ஜ.க.

மேற்கு வங்கத்தை பொறுத்தவரை 27% முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் வாக்குகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மம்தா கட்சியும் முஸ்லிம் வாக்குகளை நம்பித்தான் இருக்கின்றது. ஆனால், சித்திக்கின் இந்தப் புதிய அவதாரம், ஓவைசி தனித்துப் போட்டி ஆகியவை முஸ்லிம் வாக்குகளை துண்டாடும். இதனால், திரிணாமுல் காங்கிரஸை தோற்கடித்துவிட முடியும் என நம்புகிறது பாஜக.

"புத்துயிர் பெற்றுள்ள இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணி, அதன் வழக்கமான வாக்குகளை மீண்டும் பெற்றுவிடுவார்கள் என்பதை எண்ணி நாங்கள் கவலைக்கொண்டோம். ஆனால், எங்களுக்கு வாக்களித்த இந்து இடதுசாரி ஆதரவாளர்கள் மீண்டும் அவர்கள் பக்கம் செல்ல மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று மேற்கு வங்க பாஜக தலைவர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸுக்கு எதிர்ப்பலை...

அப்பாஸ் சித்திக் கூட்டணி ஒருபுறம் இருக்க, அதே கூட்டணி குறித்து 'ஜி-23' குழுவில் இடம்பெற்றுள்ள ஆனந்த் சர்மா கேள்வி எழுப்பியிருக்கிறார். க்ரூப் 23-ன் சுருக்கமான ஜி-23 என்பது அதிருப்தியுற்றுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்களைக் குறிக்கும்.

காங்கிரஸ் கூட்டணியில் அப்பாஸ் சித்திக் தலைமையிலான இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐ.எஸ்.எஃப்) கட்சி இணைந்திருப்பதை ஆனந்த் சர்மா விமர்சித்து பேசியதோடு, கூட்டணி கட்சியின் முக்கிய சித்தாந்தத்திற்கும் காந்திய மற்றும் நேருவியன் மதச்சார்பின்மைக்கும் எதிரானது என்று கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக சமீபத்தில் அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ``ஐ.எஸ்.எஃப் போன்ற ஒரு தீவிரமான கட்சியுடன் பிணைப்பு என்பது கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் செயற்குழு (சி.டபிள்யூ.சி) விவாதித்து ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். ஐ.எஸ்.எஃப் மற்றும் பிற சக்திகளுடன் காங்கிரஸின் கூட்டணி கட்சியின் அடிப்படை சித்தாந்தத்திற்கும், கட்சியின் ஆன்மாவை உருவாக்கும் காந்தியன் மற்றும் நேருவியன் மதச்சார்பின்மைக்கும் எதிராக போராடுகிறது.

வகுப்புவாதவாதிகளை எதிர்த்துப் போராடுவதில் காங்கிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருக்க முடியாது. ஆனால், மதம் மற்றும் வண்ணத்தைப் பொருட்படுத்தாமல் அதன் அனைத்து வெளிப்பாடுகளிலும் அவ்வாறு செய்ய வேண்டும். மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்திருப்பது வேதனையானது மற்றும் வெட்கக்கேடானது. அவர் இதை தெளிவுபடுத்த வேண்டும்" என்றவர், கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் வைத்துள்ள கூட்டணியையும் கேள்வி எழுப்பியுள்ளார்.

``மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் கேரளாவில் அவர்களை எதிர்த்து போராடுகிறது" எனத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணி தொடர்பாக ஆனந்த் சர்மாவின் இரண்டாவது வெளிப்படையான தாக்குதல் இதுவாகும். இதற்கு முன்பும், இதுபோன்று விமர்சித்து இருந்தார்.

இவர் மட்டுமல்ல, சனிக்கிழமை, காங்கிரஸின் பல அதிருப்தி தலைவர்கள் ஜம்முவில் கூடி, காங்கிரஸ் தலைமையின் சில முடிவுகளை வெளிப்படையாக கேள்வி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com