காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் எதிர்ப்போம்: சித்தராமையா
மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
காவிரி ஆற்று நீர்ச் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.
தமிழகத்திற்கு ஆண்டொன்றிற்கு 192 டி.எம்.சி.தண்ணீரை கர்நாடகம் வழங்கிட வேண்டும் என்று நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு சொல்லிய நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகம் இழந்திருக்கும் 14.75 டி.எம்.சி தண்ணீர் கர்நாடகாவிற்கு கூடுதலாக வழங்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டு இருந்தாலும், உரிய காலத்தில் தண்ணீரை முறையாக திறந்துவிடுவது, அதனை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களில் அமைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையை நேரடியாகக் குறிப்பிடாததன் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மேலும் தாமதம் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளது, ஆனால் எவ்வளவு காலத்தில் என்பது தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த கேள்விக்கு விடை கிடைக்கப்படாமலே உள்ளது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், அதனை கர்நாடகா எதிர்க்கும் என்று சித்தராமையாக கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திட்டத்தை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு சென்றுள்ளது வரவேற்புக்குறியது. உச்சநீதிமன்றம் எங்களது தேவைகளையும் கருத்தில் கொண்டு தீர்ப்பு அளித்துள்ளது. மத்திய அரசு காவிரி பாசன மாநிலங்களையும் ஒருங்கிணைத்து கமிட்டியோ அல்லது வாரியத்தையோ அமைக்க வேண்டும், அப்படியில்லாமல் அமைக்கப்படும் வாரியத்தை கர்நாடகா எதிர்க்கும்” என்று கூறியுள்ளார்.