வீடியாவை எடுத்தது சசிகலா, எடுக்கச் சொன்னது ஜெயலலிதா: கிருஷ்ணப்பிரியா
ஜெயலலிதா சொன்னதால் தான் சசிகலா வீடியோவை எடுத்தார் என்று இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.
நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ வெளியாகியது. டிடிவி.தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் அதனை வெளியிட்டார். இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீடியோ வெளியிடப்பட்டதற்கு ஃபேஸ்புக்கில் கண்டனம் தெரிவித்திருந்த சசிகலாவின் அண்ணன் மகளும், விவேக் ஜெயராமனின் சகோதரியுமான கிருஷ்ணப்ரியா, வீடியோவை வெளியிட்டது டிடிவி உடனிருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல் என கூறினார்.
இந்நிலையில் தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணப்பிரியா, “வீடியோவை எடுத்தது சசிகலா. எடுக்கச்சொன்னது ஜெயலலிதா. ஜெயலலிதா சொன்னதால்தான் சசிகலா வீடியோவை எடுத்தார். தனக்கு பின்னே என்ன இருக்கிறது என்பதை காணவேண்டும் என ஜெயலலிதா நினைத்ததால் வீடியோ எடுக்கப்பட்டது. இந்த வீடியோவை முன்பே வெளியிடும்படி ஊடகத்தினர் கேட்டபோது கூட சசிகலா மறுத்துவிட்டார். டிடிவி தினகரனிடம் கொடுக்கப்பட்ட வீடியோ வெற்றிவேலிடம் சென்றது எப்படி? ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை விசாரணை ஆணையத்திடம் தருவதற்காக சசிகலாதான் எங்களிடம் வழங்கினார். ஆனால் வீடியோவை வெளியிட்டு வெற்றிவேல் துரோகம் செய்துள்ளார். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை இந்த நேரத்தில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன? கொலைப்பழி வந்தபோது கூட சசிகலா வீடியோவை வெளியிடவில்லை. வெற்றிவேல் மீது டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக டிடிவி தினகரனிடம் இதுவரை பேசவில்லை, ஆனால் நேரில் சந்தித்து விளக்கம் கேட்பேன்” என்று கூறினார்.