''ரஜினியும் மோடியும் சேர்ந்தால் தமிழகத்தில் வெற்றிதான்'' - ஆடிட்டர் குருமூர்த்தி ஆருடம்
ரஜினிகாந்தும் நரேந்திர மோடியும் சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியும் என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுவது போல் தோன்றவில்லை என விமர்சனமும் செய்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய குருமூர்த்தி, “தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தலைமை வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மோடியின் ஆட்சித் திறமை, ரஜினியின் மக்கள் ஆதரவு சேர்ந்தால் வெற்றிடம் நிரம்பும். ரஜினி, கமலிடம் அரசியல் பேசுவேன். ஆனால், அவர்களுக்கு நான் அரசியல் ஆலோசகர் அல்ல” என்று கூறினார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நீட் குறித்த முழு புரிதல் யாருக்கும் இல்லை என்பதால் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல் தான், காவிரி வழக்கில் தீர்ப்பு வந்த போது எதிர்ப்பு தெரிவித்து போராடினார்கள். பின்னர், தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரி போராட்டம் நடத்துகிறார்கள்” என்றார்.