ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை முன் தர்ணா - காங்., மஜத திட்டம்
ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காவிட்டால் ராஜ்பவன் முன்பு தர்ணாவில் ஈடுபட காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகின்றது. எடியூரப்பாவும், காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமியும் ஆட்சி அமைக்க உரிமை கோரி தனித்தனியே ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். ஆனால், ஆளுநர் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆளுநரை இன்று சந்தித்த எடியூரப்பா நாளை முதலமைச்சராக பதவியேற்பேன் என்று கூறினார். இதனால், அதிக இடங்களை பிடித்த கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை தான் ஆளுநர் முதலில் ஆட்சி அமைக்க அழைப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆளுநர் வாஜுபாய் வாலா ஆட்சி அமைக்க தங்களை அழைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த தர்ணாவில் காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்களும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, பாஜகவுக்கு ஆளுநர் கால அவகாசம் அளிக்கும் பட்சத்தில் தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களின் பாதுகாக்கும் பொருட்டு பெங்களூருக்கு அருகில் உள்ள ஈகிள் ரிசாட்டில் அவர்களை தங்கள் வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. குஜராத் மாநிலங்களவை தேர்தலின் போது அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40க்கும் மேற்பட்டோர் இந்த ரிசாட்டில் தான் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை கர்நாடக காங்கிரஸ் அமைச்சராக இருந்த சிவக்குமார் தான் கவனித்துக் கொண்டார். தற்போது, கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதே ரிசாட்டில் தங்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.