"ஜெயித்தால் கட்சி மாறமாட்டேன்" - கட்சி தாவலும் கோவா அரசியலின் பின்புலமும்!

"ஜெயித்தால் கட்சி மாறமாட்டேன்" - கட்சி தாவலும் கோவா அரசியலின் பின்புலமும்!
"ஜெயித்தால் கட்சி மாறமாட்டேன்" - கட்சி தாவலும் கோவா அரசியலின் பின்புலமும்!

இந்தியாவில் எம்எல்ஏக்கள் கட்சி மாறுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் மற்ற எந்த மாநிலங்களையும் விட கோவாவில்தான் இந்த போக்கு மிக அதிகளவில் உள்ளது. இதனால் ஜெயித்தால் கட்சி மாற மாட்டேன் என தேர்தலுக்கு முன்பு வேட்பாளர்களிடம் சத்தியப்பிரமாணம் வாங்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது

கோவாவில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 60% சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் தேர்வான கட்சியிலிருந்து வேறு ஒரு கட்சிக்கு மாறியுள்ளனர் என்கிறது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் ஆய்வு. குறிப்பாக கடந்த 2017ஆம் ஆண்டு இங்கு நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற 17 காங்கிரஸ் வேட்பாளர்களில் 16 பேர் கட்சி மாறிவிட்டனர். இப்போது ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே காங்கிரஸ் கட்சியில் உள்ளார்.

காங்கிரஸிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரசுக்கு தாவியவர்களில் முன்னாள் முதலமைச்சர் லூசினோ ஃபெலைரோ குறிப்பிடத்தக்கவர். இவருக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்பி பதவி வழங்கியுள்ளது. முன்னாள் அமைச்சரான மைக்கேல் லோபோ பாரதிய ஜனதாவிலிருந்து காங்கிரசுக்கு மாறிவிட்டார். முன்னாள் முதலமைச்சரான சர்ச்சில் அலிமாவ் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் இருந்து விட்டு தற்போது திரிணமூல் காங்கிரசுக்கு மாறியுள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர்களின் கட்சித்தாவல் கட்சித் தலைமைகளுக்கு மிகப்பெரும் தலைவலியாக மாறியுள்ளது. தான் வாக்களித்த வேட்பாளர் ஜெயித்த பின்னர் தான் விரும்பாத வேறு ஒரு கட்சிக்கு மாற மாட்டார் என்பது என்ன நிச்சயம் என ஓட்டு கேட்டு வருபவர்களிடம் வாக்காளர்கள் கேள்விகளால் துளைத்தெடுக்கின்றனர். இதைத்தொடர்ந்து கோவாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அண்மையில் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு தேர்தலுக்கு பிறகு கட்சி மாற மாட்டேன் என அவர்களிடம் வாக்குறுதி பெறப்பட்டது.

இது மட்டுமல்ல.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் 37 காங்கிரஸ் வேட்பாளர்களும் தேர்தலுக்கு பின் கட்சி மாற மாட்டோம் என உறுதிமொழி கொடுத்து அதை எழுத்துப்பூர்வமாக எழுதியும் தந்தனர். இதே போல ஆம்ஆத்மி கட்சியும் தனது வேட்பாளர்களிடம் உறுதி மொழி பெற்றுள்ளது. கட்சித்தாவல் அரசியல் இந்த முறையாவது முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பில் ஏக்கத்துடன் இருக்கின்றனர் கோவா மக்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com