மலேசியாவில் தான் சிறைக் கைதி போல் நடத்தப்பட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வைகோ கோலாலம்பூர் சென்றிருந்தார். அப்போது அவரை கோலாலம்பூர் விமான நிலைய குடியேற்ற அதிகாரிகள் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்தனர். வைகோ ஆபத்தானவர்கள் பட்டியலில் இருப்பதாகவும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்பதால் அவரை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து அவர் நேற்றிரவு சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மலேசியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நபர் எனக் கூறி தமக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மலேசியாவில் தான் சிறைக் கைதி போல் நடத்தப்பட்டதாகவும் சாப்பிடக் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.
இதன் பின்னணியில் இலங்கை அரசின் சதி உள்ளதாகவும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குரல்களும் ஈழப்படுகொலை குறித்த பேச்சும் உலகின் எந்த மூலையிலும் எழக் கூடாது என இலங்கை நினைப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.
மலேசிய அரசின் செயலை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்த வைகோ, இதுகுறித்து பிரதமர் மோடிக்கு விரிவான கடிதம் எழுத உள்ளதாகத் தெரிவித்தார். மலேசிய சம்பவம் குறித்து ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் தமக்கு ஆதரவாக பேசியது நெகிழ்ச்சி தருவதாகவும் அவர் தெரிவித்தார்.